நெதர்லாந்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது ஆக்சிஜன்!

Share this News:

சென்னை (17 மே 2021): இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் இருந்து தடுப்பூசி கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால் முன்கூட்டியே தமிழக மக்களுக்கு போடுவதற்காக உலக மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

அதன்படி 5 கோடி டோஸ் மருந்துகளை வாங்க உலகளாவிய டெண்டர் விட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜூன் 5-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு உரிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும்.

இதே போல் தமிழ் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்தது.

இதைத் தொடர்ந்து நெதர்லாந்து நாடு ஆக்சிஜனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது. நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலமாக ஆக்சிஜன் சென்னை வந்தடைந்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரயோஜெனிக் கண்டெய்னர் மூலமாக தமிழகத்திற்கு ஆக்சிஜன் வந்திருப்பதாக கூறி உள்ளார்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து 500 சிலிண்டர் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டில் தற்போது 480-ல் இருந்து 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 440 மெட்ரிக் டன்னில் இருந்து 470 மெட்ரிக் டன் ஆக்சிஜனே கிடைக்கிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்தது. இதை அதிகப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 வாரத்தில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று கணிக்கிடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு குறைந்தபட்சம் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *