விழுப்புரம் (04 பிப் 2020): விழுப்புரத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கம்பன் நகரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55) மேலாளராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமையும் பணியில் இருந்தார்.
பகல் 11 மணியளவில் காரில் வந்த 4 மர்ம நபர்களும், பைக்கில் வந்த 2 மர்ம நபர்களும் பெட்ரோல் பங்கில் டீசல் பிடிப்பது போல் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பெட்ரோல் பங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அலுவலகத்தில் இருந்த மேலாளர் சீனிவாசனிடமும் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், திடீரென நாட்டு வெடிகுண்டை வீசியும், கத்தியால் வெட்டியும் மேலாளர் சீனிவாசனைப் படுகொலை செய்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் துணைக் கண்காணிப் பாளர் சங்கர் மற்றும் விழுப்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.