சென்னை (16 ஜூன் 2020): பெட்ரொல், டீசல் விலை உயர்வால் பலருக்கு வாகனம் வாங்கும் ஆசையே போய்விடது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன.
ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ் சென்றது. எனினும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10-வது நாளாக இன்று அதிகரித்துள்ளது.
ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10, டீசலுக்கு 13 என கலால் வரியை உயர்த்தியது. போதாக்குறைக்கு, மாநிலங்களும் வாட் வரியை உயர்த்தின. இதற்கிடையில். 82 நாட்கள் கழித்து, கடந்த 7ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 10 வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று 10-வது நாளாக பெட்ரோல் 41 காசு உயர்ந்து 80.37 ஆகவும், டீசல் 48 காசு உயர்ந்து 73.17 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 நாளில் பெட்ரோல் லிட்டருக்கு 4.82, டீசல் லிட்டருக்கு 4.95 அதிகரித்துள்ளது.