இராமநாதபுரம் (21 டிச 2021): இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக காவல்துறை ஆள் மாற்றி விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலி விசா தயாரித்து ஒருவரை ஓமன் நாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் வந்துள்ளனர். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த நபீல் என்பவரை பக்ரூதீன் என தவறாக நினைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும் சீருடையில் இல்லாமால் சாதாரண உடுப்பில் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மீது நபீலுக்கு சந்தேகம் வரவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் நபீலை தாக்கியுள்ளனர். நபீல் தாக்கப்படுவதை பார்த்து உள்ளூர் இளைஞர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதன் பின்னரே உள்ளூர் காவல்துறையினர் வந்து இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். உள்ளூர் காவல்நிலையத்தில் தகவல் அளித்த பின்னர் விசாரணை மேற்கொள்ள டெல்லி காவல்துறையினருக்கு அறிவுறுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் நபீலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.