சென்னை (16 மே 2021); இனி ரெம்டெசிவிர் மருந்துகளை தேவைப்படும் நோயாளிகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எடுத்துவரும் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்க வழி வகை செய்துள்ளது.
மேலும் வருகிற 18.05.2021 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும். மேலும் அவர்களில் யாருக்கெல்லாம் மருந்து தேவை என்பது குறித்த கோரிக்கையையும் அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். அரசு இதற்ககென் இணையதள வசதியை இந்த இரண்டு நாளில் உருவாக்க உள்ளது.
இந்த வெளிப்படைத்தன்மை காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எத்தனை பேர், அவர்களில் யாருக்கெல்லாம் மருந்து தேவை என்பதை எளிதாக அரசால் அறிய முடியும். மருத்துவமனைகளின் கோரிக்கைகளை பரிசிலீத்து அரசு ரெம்டெசிவிர் மருந்தை இனி ஒதுக்கீடு செய்யும். அந்த மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மட்டும் வந்து இனி மருந்துகளை வாங்கி செல்வார்கள். அதை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மருந்தை மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முறையில் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்பதால் பலரும் வாங்கிவைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய முடியாது. மேலும் மருத்துவமனைகள் யார் யாருக்காக மருந்து வேண்டும் என்று சொல்லி வாங்கினார்களோ அவர்களுக்கே அளிக்க வேண்டியது வரும். தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு வாங்கிய மருந்தை அவர்களுக்கே அளிக்கின்றனவா என்பதை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்டால் இனி நடவடிககை பாயும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இதன் காரணாக ரெம்டெசிவிர் மருந்துக்காக கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தெரிகிறது.