எம்ஜிஆர் பெயரில் திருத்தம் – செம கோபத்தில் அதிமுகவினர்!

Share this News:

சென்னை (30 மார்ச் 2022): எம்ஜிஆர் பெயருக்கு முன்னாள் உள்ள புரட்சித்தலைவர் நீக்கப்பட்டதால் அதிமுகவினர் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனத் தலைவரும், புரட்சித் தலைவர் என அழைக்கப்படுபவருமான டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த அஇஅதிமுக ஆட்சியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்ற, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பினார்.

இதை ஏற்ற மத்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்ற ஒப்புதல் அளித்தது. இதன்படி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கான அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் – சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்கப் பாதையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதற்காக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு விளம்பரத்தில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்பதற்கு பதில், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அதிமுக நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *