தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி கரூர் நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பிற பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடர் மழை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு,திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, கடலூர், விழுப்புரம்,சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.