சென்னை (21 ஜூலை 2022) : கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தன்னிச்சையாக வேலைநிறுத்தம் செய்த பள்ளிகள் கூடுதலாக ஒரு நாள் பள்ளியை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாணவி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில், 18ம் தேதி திடீர் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுதும், 987 மெட்ரிக் பள்ளிகள் இயங்கவில்லை.
இந்த விவகாரத்தில், தன்னிச்சையாக விடுமுறை அறிவித்ததற்கு விளக்கம் கேட்டு, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி துறை சார்பில் ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. இதற்கு, பள்ளிகள் சார்பில் விளக்க கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேலைநிறுத்தம் செய்த பள்ளிகள், வழக்கமான நாட்களுடன் கூடுதலாக ஒரு நாள், அதாவது சனிக் கிழமை பள்ளிகளை இயக்க வேண்டும் என, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. ‘வரும் காலங்களில், பள்ளிக் கல்வி கமிஷனரக அனுமதி இன்றி, தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தால், அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனவும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.