சென்னை போலீஸின் பெண்கள் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதம் – சீமான் கண்டனம்!

Share this News:

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின்போது பெண்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் அரச பயங்கரவாதம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப் பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டியதும், அதற்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும் இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில் நாட்டின் மீது பற்றுக்கொண்டு, மதச்சார்பின்மையைக் காக்க அறவழியில் போராடியவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது ஏற்கவே முடியாத பாசிசம்; அரசப்பயங்கரவாதம்.

ஆகவே, குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், போராடுவோர் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அறவழியில் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply