சென்னை (28 மே 2020): எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் செளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் கொரோனா பயமா? என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது.
கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் படைகளைக் குவித்து வரும் சூழலில், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “லடாக் எல்லையில் சீனப் படைகள் குவிப்பு என்று செய்திகள் வருகின்றன. பெயருக்குப் பின்னாலும் முன்னாலும் ‘சௌகிதார்’ எனச் சேர்த்துக்கொண்ட பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என யாரும் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே..! ஏன்? கொரோனா பயமா!? “என்று கேள்வி எழுப்பியுள்ளார்.