சென்னை (13 ஏப் 2020): தமிழகம் சார்பாக ஆர்டர் செய்திருந்த ரேபிட் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கைபற்றியது குறித்து வெளியான செய்திக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள ரேபிட் சோதனை கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.
அந்த ரேபிட் சோதனை கருவிகள் இந்தியா வந்துவிட்டதாகவும், மத்திய அரசு அதை மாநில அரசுகளுக்கு பகிர்ந்து வழங்கும் எனவும் உள்ளூர் பாஜக பிரபலங்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் பேசுகையில் ரேபிட் கருவிகள் இன்னமும் இந்தியா வரவில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘ தமிழக அரசு கேட்ட 9,000 கோடி ரூபாய் நிதியைத் தராமல் வெறுமனே 517 கோடி ரூபாயை அளித்து வஞ்சித்த மோடி அரசு, தற்போது தமிழக அரசின் நிதியில் கொள்முதல் செய்யப்பட்டப் பொருட்களைப் பறித்து மற்ற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதாக வந்த செய்தி அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தருகிறது’ என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பலர் #SeemanCondemnsModi என்ற ஹேஷ்டேகை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.