டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் – ஸ்டாலின் கண்டனம்!

Share this News:

சென்னை (19 ஜன 2020): ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

, “ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட “சுற்றுச்சூழல் அனுமதியும்” “மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும்” தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தி, மத்திய பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் ஏற்கனவே 341-க்கும் மேற்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, வேளாண் மண்டலம் என்பதற்குப் பதிலாக, அதைப் பாழ்படுத்தி ரசாயன மண்டலமாக்கும் மத்திய பா.ஜ.க அரசு, இதுமாதிரி பின்னடைவான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி, விவசாயிகளின் வயிற்றிலடித்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை அடியோடு நாசப்படுத்தும் இந்த அனுமதிகள் எதிர்கால சமுதாயத்தையும், தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் செயலாகும். மனிதநேயம் சிறிதேனும் இன்றி எடுக்கப்படும் இந்த முடிவுகள், மனிதகுலத்திற்கே பேரிடராக முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

“தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்க அனுமதிக்கமாட்டோம்” என்று சட்டமன்றத்தில் உறுதியளித்த அ.தி.மு.க அரசு, அதுதொடர்பாக எவ்வித கொள்கை முடிவையும் இதுவரை எடுக்காமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, மத்திய பா.ஜ.க அரசின் செயலுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து நடைபாவாடை விரித்து வரவேற்று வருகிறது.

ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டுவதை அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குக் கூட இதுவரை அறிவுரைகள் வழங்கிடவில்லை. விவசாயிகளின் நலன்களைப் புறந்தள்ளி மத்திய பா.ஜ.க அரசும், மாநில அ.தி.மு.க அரசும் கூட்டுச் சேர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் உதவி உற்சாகப்படுத்துவது, தமிழக வேளாண் தொழிலை முற்றிலும் சீர்குலைத்து, காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.

ஆகவே ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு “சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை” என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை வலியுறுத்திடவும், நாளை கூடவிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவினை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *