சென்னை (14 நவ 2022):: மழை வெள்ளதிற்கு காரணமான எதிர் கட்சிகளின் ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ள பாதிப்பை பார்வையிட நாளை(நவ.,15) அங்கு செல்கிறேன். மழை வெள்ள பாதிப்பு குறித்து அறிக்கை தயார் செய்து, அதனை பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் நேரடியாக பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம்.
மழை வெள்ளம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பற்றி கவலைப்படுவது கிடையாது.
என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல, ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வது தான் எனது கொள்கை. அந்த வழியில் எங்களது பயணம் தொடரும்.
எதிர்க்கட்சிகள் என்ன புகார் செய்தாலும், அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் செய்த, அக்கிரமத்தை, அநியாயத்தை மழை முடிந்த பிறகு, அதற்கு என்று விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, தவறுகள் நடந்துள்ளதை கண்டறிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.