சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 15ஆம் தேதியை சர்வதேச இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாளாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறுபான்மையினருக்கு எதிரான இழிவான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையின் வரலாறு என்றும், அது இன்னும் மனித குலத்தின் மீது கறையாகவே உள்ளது என்றும் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“சிறுபான்மையினருக்கு எதிரான இழிவான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை இன்னும் மனிதகுலத்தின் மீது ஒரு கறையாகவே உள்ளது. உலக இஸ்லாமிய வெறுப்பு எதிர்ப்பு தினத்தில், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதிமொழி எடுப்போம், அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்போம்” என்று ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.