உதய்ப்பூர் வன்செயல் – திருமாவளவன் கண்டனம்!

Share this News:

சென்னை (30 ஜூன் 2022: உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். நுபுர் சர்மாவும் சனாதன பயங்கரவாத அரசியலின் விளைச்சல்தான். எனவே அழித்தொழிக்கப்பட வேண்டியது நபர்களல்ல; வெறுப்பை விதைக்கும் பயங்கரவாத கோட்பாடே ஆகும்.

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்துவது என்பது இஸ்லாமியச் சமூகத்தைச் சீண்டி வம்பிழுக்கும் திட்டமிட்ட சதிச் செயலே ஆகும். இஸ்லாமியர்களை வீதிக்கு இழுப்பதன் மூலம் எதிர்வினையாக இந்துக்களை ஒருங்கே திரட்டுவது தான் அவர்களின் நோக்கமாகும். இந்தியர்களை இந்துக்கள் x இஸ்லாமியர் என பிளவுப்படுத்துவதும் அதன்வழி இந்துப் பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதும் தான் சனாதனிகளின் சதி திட்டமாகும். இதனைப் புரிந்துகொள்ளத் தவறினால் அறிந்தோ அறியாமலோ அவர்களின் சதி நோக்கங்களுக்குத் துணை போவதாக அமையும்.

உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே ஆகும். இது இஸ்லாமியரோடு சனநாயக சக்திகள் அணிதிரளுவதைத் தடுத்திட வழிவகுக்கும் எனவே, இதனைப் புரிந்து கொள்வதுடன், இன்றைய சூழலில் பாஜக-வையும் சங்பரிவார்களையும் தனிமைப்படுத்த வேண்டியது தவிர்க்கமுடியாத ஒரு தேவையாக உள்ளது என்பதை இந்திய இஸ்லாமியச் சமூகம் தெளிவாக உணர்ந்து கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டுமென்பதையும் விசிக சுட்டிக் காட்ட விரும்புகிறது.” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply