சென்னையில் அதிர்ச்சி – பிரிட்ஜ் வெடித்து மூவர் உயிரிழப்பு!

Share this News:

சென்னை (04 நவ 2022): சென்னை ஊரப்பாக்கத்திலுள்ள கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவிலுள்ள பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில், கிரிஜா என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. நேற்று துபாயிலிருந்து சென்னை வந்த கிரிஜா, பிருந்தாவன் அபார்ட்மெண்ட்டில் உள்ள தனது வீட்டில் ராதா, ராஜா என்ற தனது 2 உறவினர்களுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீட்டிலிருந்த ரெஃப்ரிஜரேட்டரின் கம்ப்ரசர் வெடித்துள்ளது. இதனால் எழுந்த புகையில், மூச்சு விட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிரிஜா, ராதா, ராஜா ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

கிரிஜாவின் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டியுள்ளனர். கதவை திறக்காத நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கதவை உடைத்துக்கொண்டு, உள்ளே சென்று பார்த்த போது, மூவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வீட்டினை ஆய்வு செய்த தீயணைப்பு துறையினர், மின்கசிவு ஏற்பட்டு ஃபிரிட்ஜ்ஜின் கம்ப்ரசர் வெடித்ததில் உண்டான புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஃபிரிட்ஜ் வெடித்து மூன்று பேர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply