சென்னை (20 செப் 2020): அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோஷமிட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரியில் விடுதலையாவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சசிகலா விடுதலையானால் அதிமுகவை அவரே தலைமையேற்று நடத்துவார் என்கிற பேச்சும் உள்ளது. மேலும் அவர் ஜனவரிக்கு முன்பே விடுதலையாவார் என்றும் கூறப்படுகிறது.
இது இப்படியிருக்க திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (20.09.2020) சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்றுள்ளார். தினகரனின் டெல்லி பயணம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.