புதுடெல்லி (16 டிச 2021):வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து தொடரும் என்றும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.