டிசம்பர் 6 தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் – திருமாவளவன் அறிக்கை!

Share this News:

சென்னை (06 டிச 2022): டிசம்பர் 6 ஐ தலித் இஸ்லாமிய எழுச்சி நாளான இன்று சகோதரத்துவத்துவத்தை வளர்த்தெடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது,

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

*திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளில்*, அவர் புதிய இந்தியாவைக் கட்டமைத்திட ஆற்றியுள்ள அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அத்துடன், சனாதன சங்பரிவார்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் இதே நாளாகும். ஆகவேதான், ஆண்டுதோறும்+ இந்நாளை ‘தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாளாக’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடைபிடித்துவருகிறது.

சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட இயலும் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அத்தகைய போற்றுதலுக்குரிய சனநாயகப் பாதுகாவலரின் நினைவுநாளான இந்நாளில் சங்பரிவார்களின் அநாகரிக வெறுப்பு அரசியலுக்கு எதிரான – சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கிறது.

அதாவது, அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே அம்பேத்கர் சிலைகளுக்கு அல்லது அவரது உருவப் படங்களுக்கு மாலையணிவித்து-மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்திற்கான உறுதிமொழியையும் இயக்கத் தோழர்கள் ஏற்றிடவேண்டும்.

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்கள் ஒருபுறம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாடக அரசியலைச் செய்து வருகின்றனர். அதே வேளையில், இன்னொருபுறம் அவரது சமத்துவக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அழித்தொழிப்பதிலே குறியாக உள்ளனர். அதனை உணரத் தவறினால் நாம் வரலாற்றுப் பெருந்தவறினை செய்தவர்களாவோம்.

எனவே, இதனை முன்னுணர்ந்து அவர்களை வெகுமக்களிடையே அம்பலப்படுத்துவதில் உறுதியாகச் செயல்படுவோம். அதற்கான ஒரு நாளாக இந்நாளைக் கடைபிடிப்போம்! சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம்!

சமூக நல்லிணக்க உறுதிமொழி

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான திசம்பர்-06 இன்று அவருக்கு எமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அத்துடன், இதே நாளில் சங்பரிவார்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அதன்மூலம் இசுலாமியர்- கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் தகர்க்கப்பட்டதையும் பெருங்கவலையுடன் நினைவு கூர்ந்திடுகிறோம்.

மேலும் , சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தொடரும் வெறுப்பு அரசியலை முறியடிக்கவும்;

சங்பரிவர்களை அம்பலப்படுத்தவும்; இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் போன்ற அனைத்துத் தரப்பு மக்களிடையே சகோதரத்துவத்துவத்தை வளர்த்தெடுக்கவும்; சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும்-
‘தலித்- இசுலாமியர் எழுச்சிநாளான’ இந்நாளில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியேற்கிறோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply