சென்னை (29 பிப் 2020):
“குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை பாதிக்காது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பச்சை பொய்” என்று விசிக எம்பி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மேற்கொள்ளாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஷஹீன் பாக் மாடலில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
இவற்றைக் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேர்ந்தவரும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யுமான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘அமித் ஷா பச்சைப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லீம்களின் குடியுரிமையை பறிப்பதற்குத்தானே இந்தச் சட்டத் திருத்தம்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்
குடியுரிமைச் சட்டம் அமல் படுத்தப்பட்டதிலிருந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களில் குறிப்பாக வட மாநிலங்களான உபி, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்துத்வா அமைப்பினர் இனப்படுகொலையில் ஈடுபட்டு பல உயிர்களை பறித்து வருகின்றனர் என்பது அச்சத்துடன் கவனிக்கத்தக்கது.