சென்னை (31 ஆக 2020): உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் ராம கோபாலனும், இல கணேசனும் விரைவில் நலபெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தி.க.தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் அவர்கள், கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என்ற நம் விழைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கெனவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன் அவர்களும் நலம் பெற்று மீண்டும் தம் பொதுவாழ்வைத் தொடரவேண்டும் என்றும் விரும்புகின்றோம்.
கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.