புதுடெல்லி (04 ஜூலை 2020): பிப்ரவரி 2020-இல் நடந்த டெல்லி கலவரத்தைப் பிரத்யேகமாக முன்னின்று நடத்தியவர் பாஜக கவுன்சிலர் என ‘நேரில் பார்த்தவர்’ சாட்சி பகர்ந்துள்ளார்.
“முல்லோன்கோ நிப்டாதோ” அல்லது “முஸ்லிம்களை வளைக்கச் செய்யுங்கள்” – வடகிழக்கு டெல்லியின் பாகீரதி விஹாரில் வகுப்புவாத வன்முறையின் போது பாஜக கவுன்சிலர் கன்ஹையா லால் தெரிவித்த உத்தரவுகள்தான் இவை, என அந்த பகுதியில் வசிப்பவர் டெல்லி காவல்துறைக்கு சாட்சி அளித்துள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் நடந்த வடகிழக்கு டெல்லி கலவரம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, பிரபல ஆங்கில இணையப் பத்திரிகை ஒன்று நடத்திய பல புலனாய்வு வேட்டைகளில் இந்த சாட்சியம் அடங்கிய புகாரும் ஒன்று.
வன்முறைச் செயல்களைக் கண்டதாகக் கூறும் உள்ளுர்வாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட இந்தப் புகார்கள், விரல் நீட்டுவது பெரும்பாலும் பா.ஜ.க.-வின் முக்கிய உள்ளுர் அரசியல்வாதிகளைத்தான்!
இந்த புகார்கள் பலவற்றில், பா.ஜ.க.-வைச் சேர்ந்த கராவல் நகர் எம்.எல்.ஏ மோகன் சிங் பிஷ்ட், முஸ்தபாபாத் தொகுதி பா.ஜ.க.-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஜகதீஷ் பிரதான், உத்தரபிரதேச எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் மற்றும் டெல்லி பா.ஜ.க தலைவர் கபில் மிஷ்ரா மற்றும் தன்னார்வ இந்துத்துவா தலைவர் ராகினி திவாரி போன்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகைகள் கபில் மிஸ்ராவின் பெயரை எவ்வாறு தவிர்த்துவிட்டன என்பதையும், ராகினி திவாரி அங்கு வசித்த மக்கள் மீது துப்பாக்கித் தோட்டாக்களை சுட்டதும், மேலும் கலவரக் கும்பலைத் தூண்டியதும் எப்படி என்பதற்கான நேரில் கண்ட சாட்சிகளைக் கொண்டும் அந்த புலனாய்வு இணைய பத்திரிகை ஏற்கனவே ஆதார செய்திகளை வெளியிட்டது.
தற்போது இந்தத் தொடரின் ஒரு பகுதியாக, கலவரத்தின் போது கிழக்கு டெல்லி மாநகராட்சிப் பகுதியில், ஜொஹ்ரிபூரைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் கன்ஹையா லால் அந்த கலவரத்தில் எவ்வாறு முக்கிய பங்காற்றினார் எனும் பாகீரதி விஹார் குடியிருப்பாளரின் விரிவான புகாரை தற்போது அலசத் தொடங்கி இருக்கின்றது அந்த ஆங்கில இணைய பத்திரிகை!
மார்ச் 13 அன்று கோகுல்பூரி காவல் நிலையத்தில் அந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றது அந்த இணையப் பத்திரிகை.
பகீரதி விஹார் பகுதியின் தெரு எண் 1/3 -இல் என்ன நடந்தது என்பது குறித்து அந்த புகாரின் நேரடி சாட்சி விளக்குகின்றது.
வன்முறையின் முதல் நாளான பிப்ரவரி 24 அன்று அங்கு கண்டதை விவரிப்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது அவரது வாக்குமூலம்.
“24.02.2020 அன்று, நான் என் வீட்டில் இருந்தேன். அப்போது இரவு மணி 8-9 இருக்கும். சுலசலப்புடன் கூடிய ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டு என் வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது, பால் சவுக் பகுதி சிவன் கோயில் அமைந்திருந்த இடத்திலிருந்து சுமார் 100-150 பேர் ‘ஜெய் சிறீராம்’, “—-சபக் சிகாவோ” (முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிப்போம்) ‘ஆக் லகாவோ” (தீயிட்டு கொளுத்துங்கள்;)’, ‘மாரோ”-(கொல்லுங்கள்) என்று ஆக்ரோஷத்துடன் கூக்குரலிட்டுக் கொண்டே வந்ததை நான் கண்டேன்.”
புகார் அளித்தவர், அந்த இரத்தவெறிக் கும்பல் வாட்கள், கோடாரிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக வாக்குமூலம் தருகின்றார்.
அந்த கலவரக் கும்பலை யோகேந்திர ஜீன்ஸ்வாலா மற்றும் கவுன்சிலர் கன்ஹையா லால் வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவத்தை, தான் பார்த்ததாகக் கூறுகின்றார் அந்த மனுதாரர். கன்ஹையா லால், தான் வழிநடத்திக் கொண்டிருந்த கலவரக் கும்பலை யோகேந்திர ஜீன்ஸ்வாலா-வின் கடைக்கு முன்பாக ஒன்றுகூட்டி நிறுத்தினார். பின்னர், அந்த ஒட்டுமொத்த கும்பலும் சத்தமாக முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தார்கள்.
அதேவேளை, புகார் அளித்த மனுதாரர் தங்கள் வீதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாக்க இரவு முழுவதும் பாதுகாப்பாக நின்றதையும் நினைவு கூர்ந்தார்.