மதுரை (04 ஜூலை 2021): மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புது விளாங்குடியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ சைமன். மென்பொருள் பொறியாளரான இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்று சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டு கண்காணிப்பில் இருந்தபோது எந்த உடல் உபாதைகளும் ஏற்படாததால், ஆண்ட்ரூ சைமன் வீடு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர், விடிகாலையில் கழிப்பறைக்குச் சென்ற ஆண்ட்ரூ சைமனுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் ஆண்ட்ரூ சைமனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உடற் கூறாய்வு முடிந்த பின்னரே ஆண்ட்ரூ சைமன் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவருமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி, அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.