தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023): வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும்.
வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம் முகமது அல் புதைவி இத் தகவலை வெளியிட்டுள்ளார். (இந்நேரம்.காம்)
இந்த விசா, எதிர்வரும் 2024-25 ல் முழுமையாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறு நாடுகளில் போக்குவரத்து விதிமீறல்களை இணைக்கும் மின்னணு அமைப்பையும் (Electronic system linking traffic violations) அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் ஒருவரின் வாகன விதிமீறல்கள் ஆறு நாடுகளில் எங்கு நிகழ்ந்தாலும் துல்லியமாகப் பதிவாகும்.
வளைகுடா நாடுகளுக்கு என தனி கரன்ஸி, இணைக்கும் ரயில் போக்குவரத்து என திட்டமிட்டும் வளைகுடா வரலாற்றில் இந்த விசா திட்டம், சாதனைக்கான ஒரு புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டோர் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே இச் செய்தி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
- நமது வளைகுடா செய்தியாளர் (இந்நேரம்.காம்)