இந்தியாவின் கொரோனா தடுப்பூசி (கோவாக்சின்) சோதனையில் முன்னேற்றம்!

Share this News:

புதுடெல்லி (12 செப் 2020): கொரோனாவிற்கான தடுப்பூசியில் இந்தியாவின் கண்டுபிடிப்பான (கோவாக்சின்) சோதனை முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.

இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்கள் கடந்து நலமுடன் இருப்பதால்,~ இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்ல தகுதி பெற்றது கோவாக்சின் மருந்து. முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத்தில் வயது வரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 12 வயதுடைய இளம் பருவத்தினர் முதல் 65 வயது முதியவர்கள் வரை சோதனையில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

முதற்கட்ட சோதனையில் எந்த பக்கவிளைவும் இல்லாத மருந்து என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் நோய் எதிர்ப்பாற்றல் சோதனை செய்யப்படும். இரண்டாம் கட்ட சோதனையில் தடுப்பூசி முதல் நாளிலும், பிறகு 28-வது நாளிலும் இரண்டு முறை கொடுக்கப்படும்.

அதன் பிறகு தடுப்பூசி போடப்பட்டவர்கள் 42 வது நாள், 56 வது நாள், 118 வது நாள் என 208 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். மொத்தம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள மனித உடல் சோதனையில், மூன்றாவது கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி பயனுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே கோவாக்சின் குரங்குகளிடம் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *