பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண் மீது அவதூறு பரப்பும் பாஜகவினர்!

Share this News:

லக்னோ(08 அக் 2020):உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளன.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் சிலர் சர்ச்சைகுரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி நகர பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா, ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும், அந்த நபரை வயல்வெளிக்கு அப்பெண் அழைத்திருக்க வேண்டும் எனவும் சர்ச்ச்சைகுரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட நபரில் ஒருவருடன் இளம்பெண் தொடர்பில் இருந்திருக்கலாம். இது அவருடைய பெற்றோருக்கு தெரிந்து அவர்களே அப்பெண்ணை கொன்றிருக்கலாம் எனவும் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதை உறுதிபடுத்த நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை தெரிவித்துள்ள அவர், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என தான் உறுதியாக கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்ற கேவலமான கருத்துகளை தெரிவித்துள்ள பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருவதுடன், அவரை சரமாரியாக நெட்டிசன்கள் சாடியும் வருகின்றனர். ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா மீது 44 கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *