இறங்கி வருமா காங்கிரஸ் தலைமை? – கொந்தளிக்கும் தலைவர்கள்!

Sonia Gandhi Sonia Gandhi
Share this News:

புதுடெல்லி (11 மார்ச் 2022): ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது. உள்கட்சிக்குள்ளும் எதிர்க்குரல்கள் எழ தொடங்கியுள்ளன.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்த நிலையில் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. தற்போது 2 மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

இரண்டு மக்களவைத் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ். 2024 மக்களவைத் தேர்தலிலாவது வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தலைமையிடம் அந்த எதிர்பார்ப்பும் மெனக்கெடலும் இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்கள்.

2019 போல் மூன்றாவது அணி அமைந்தால் அது மீண்டும் பாஜகவுக்கே சாதகமாக முடியும். எனவே காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு பிராந்திய கட்சிகளை அணுசரித்து ஒற்றை கூட்டணியை அமைக்க வேண்டும். பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இறங்கி வரவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கட்சிக்கு வெளியே இருந்து வந்த குரல்கள் தற்போது கட்சிக்குள்ளும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சரியான மாற்று”(alternative)என்ன என்பதினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை மாற்றம் வராது என்று உணருங்கள்! நானா? எனது கட்சியா? என்றால் எனது கட்சி! எனது கட்சியா? நாடா? என்றால் எனது நாடு! நாட்டை காப்பாற்ற கட்சி தியாகம் செய்யவேண்டிய நேரமிது! காலம் வழங்கியிருக்கும் கடைசி வாய்ப்பு! 2024! ” என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டை காப்பாற்ற கட்சியை தியாகம் செய்ய சொல்லும் பீட்டர் அல்போன்ஸிடம் சமயம் தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். “இப்போது இதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இன்னும் சில தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தி அடுத்தடுத்து பேசுவார்கள். அதன் பிறகு நான் பேசுகிறேன். தேசிய அளவிலும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி வருகிறேன்” என்று கூறினார்.

இது அல்லாமல் காங்கிரஸ் அதிருப்தி குழு விரைவில் கூடி வேறொரு தலைமையை தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *