எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி -அதிர்ச்சியில் பாஜக!

Share this News:

கொல்கத்தா (16 ஏப் 2022): மேற்கு வங்கம்,பீகார் மாநிலங்களில் இன்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கவில்லை/

பாரதிய ஜனதா வசம் இருந்த அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பாலிவுட் நட்சத்திரம் சத்துருகன் சின்ஹா கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சின்ஹா ஆரம்பத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் அக்னிமித்திரா பாலை பின்னுக்குத்தள்ளி, முன்னிலை வகித்து வந்தார். சின்ஹாவுக்கு வெற்றி உறுதி என்கிற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

இந்தத் தொகுதியில் பாஜக மக்களவை உறுப்பினராக இருந்த பாபுல் சுப்ரியோ, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவிலிருந்து விலகினார். பின்னர் தனது மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

பாஜகவிலிருந்து விலகிய பாபுல் சுப்ரியோ இந்த இடைத்தேர்தலில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட சாய்ரா ஷா ஹலிமைவிட கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. போச்சாஹான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அமர் பாஸ்வான் இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பேபி குமாரியை தோற்கடித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஜெயஸ்ரீ ஜாதவ் வெற்றி பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட சத்தியஜித் கதம் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்கவைத்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கைராகர் சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது. இதனால் இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவுகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி அடையமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *