குவைத் (31 ஆகஸ்ட் 2025): வளைகுடா (GCC) நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோருக்கான போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஒருங்கிணைக்கும் திட்டம் 95% நிறைவடைந்துள்ளது. இதற்கான புதிய போக்குவரத்து சட்டம் பற்றி GCC பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது அல்-புதைவி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் குவைத் நாளிதழான அல் கபாஸ்க்கு இவர் அளித்த நேர்காணலில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் GCC நாடுகளுக்கு இடையே நிகழும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உடனடியாக தவறிழைத்தவருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். (இந்நேரம்.காம்)
இதுநாள் வரை, ஒரு வளைகுடா நாட்டிலிருந்து பிற வளைகுடா நாட்டிற்கு வாகனத்தில் பயணிப்போர், பிற நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாமல் இருந்து வந்தது.
புதிய சட்டத்தின் மூலம் என்ன நடக்கும்?
எடுத்துக்காட்டாக, ஒரு நபர் தனது வாகனத்தில் துபாயில் இருந்து சவூதிக்கு பயணம் செய்து அங்கே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், புதிய போக்குவரத்து சட்டம் மூலம் ஓட்டுனரின் மொபைல் ஃபோனுக்கு உடனடியாக தகவல் அனுப்பப்படும். அத்துடன், ஓட்டுநர் சார்ந்துள்ள வளைகுடா நாட்டின் அமைச்சகத்திலும் இதற்குரிய அபராதம் பற்றிய விபரங்கள் பதிவாகும்.
இந்த நேர்காணலின் போது, தற்போது நடைபெற்று வரும் பிற GCC திட்டங்களையும் எடுத்துரைத்தார் பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது. அதில் முக்கியமானது GCC ரயில்வே திட்டமாகும், இது 2030க்குள் நிறைவடையும் என இலக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களைக் கீழ்க்கண்ட செய்திகளில் காணலாம்.
பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!
கத்தார்-பஹ்ரைன் இணைக்கும் பாலம் கட்டும் பணி துவக்கம்!
ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!
ஒட்டு மொத்தமாக 2,177 கிலோமீட்டர் நீளமுள்ள ஒருங்கிணைந்த இந்த ரயில்வே பாதை, குவைத்தில் தொடங்கி, சவூதி அரேபியாவின் தம்மாமை கடந்து, பஹ்ரைன் தலைநகரான மனாமாவை அடையும்.
மேலும் தம்மாமிலிருந்து சல்வா எல்லை வாயிலாக தோஹா செல்லும் பாதையும் இருக்கும், இது கத்தாரையும் பஹ்ரைனையும் இணைக்கும். அதேபோல சவூதி அரேபியாவில் இருந்து அபுதாபி மற்றும் அல்-அயின் வழியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பாதை, பின்னர் சோஹார் வழியாக ஓமான் தலைநகர் மஸ்கட் சென்றடையும்.
- இந்நேரம்.காம்

One thought on “வளைகுடா நாடுகளுக்கு வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்!”
Comments are closed.