தோஹா, கத்தார் (23 மே 2024): கத்தார் நாட்டில் வசிப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்று புதிய விதிமுறை-யாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி 2024 முதல் சாலை, விமானம் மற்றும் கடல் மார்க்கமாக கத்தாரில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்போர் மீதான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் ஏதும் பெற்றிருந்தால் அதனை முழுமையாகச் செலுத்தாமல் பயணிக்க இயலாது என்று அறிவித்துள்ளது. (இந்நேரம்.காம்)
உள்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா கலீபா அல் முஃப்தா இந்தப் புதிய விதிமுறை பற்றி கூறியதாவது:
போக்குவரத்து விதிகளை மீறியோர் தாங்கள் இதுவரை பெற்ற அபராதம் மற்றும் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தாமல் கத்தார் நாட்டின் எல்லைகளைக் கடந்து செல்ல செப்டம்பர் 1, 2024 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதே சமயம், எதிர்வரும் ஜூன் 1, 2024 முதல் அனைத்து சாலை விதிமீறல் அபராதங்களுக்கும் 50% தள்ளுபடியும் அறிவிக்கப் பட்டுள்ளது. வெளியான இன்னொரு விதியின்படி, பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் டெலிவரி மோட்டார் பைக்குகள் சாலைகளில் இடது பக்கமுள்ள அதிவேக சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபராதங்களை Metrash2 செயலி அல்லது உள்துறை அமைச்சக இணையதளம் அல்லது ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மூலம் எளிதாகச் செலுத்தலாம் என்று அவர் கூறினார்.
- நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)