இரண்டாம் ஒப்பீடு: யூதர்களின் சியோனிஸமும் பிராமணர்களின் இந்துத்துவாவும்!
‘இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்கள்’ என்று தமிழிலே மிகவும் பிரபலமான பழமொழி ஒன்றுண்டு. ஒதுங்க இடம் இல்லாமல் சுற்றித் திரிபவனுக்கு இருக்க இடம் கொடுத்தால் அதற்கு பரிகாரமாக நன்றியையும் மகிழ்ச்சியையும்தானே தருவான். அவன் எப்படி படுக்க பாய் கேட்பான்? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.
இந்த சந்தேகம் யாருக்கெல்லாம் வருகிறதோ அவர்கள் அனவரும் பாலஸ்தீனத்தின் வரலாற்றைச் சற்று திரும்பிப் பாருங்கள். பாலஸ்தீனத்தின் வரலாற்றைப் படிப்பவர்கள் இந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மையானது என்பதை விளங்கிக் கொள்வார்கள்.
ஏனெனில் பாலஸ்தீனத்தில் சியோனிஸ யூதர்கள் செய்த அட்டூழியங்களும், பயங்கரவாத நடவடிக்கைகளும் கொஞ்ச நஞ்சமல்ல..உலகின் பல்வேறு பாகங்களில் விரவி, பல இடங்களில் அடியும் உதையும் வாங்கி அல்லல்பட்டுக் கிடந்த யூதர்களுக்கு ஒதுங்குவதற்காக இடம் கொடுத்தவர்கள் பாலஸ்தீன முஸ்லிம்கள். ஆனால் இறுதியில் அந்த பாலஸ்தீனத்தையே அபகரிக்க நினைக்கிறார்கள் சியோனிஸ யூதர்கள். பாவப்பட்டு இடம் கொடுத்தால் பாலஸ்தீனத்தையே எழுதி கேட்கிறார்கள் சியோனிச படுபாவிகள்.
அதனால்தான் பா.ராகவன் என்பவர் ‘நிலமெல்லாம் ரத்தம்‘ எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல் (ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன்) பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான்’ என்கிறார். ஆகவேதான், இருபதாம் நூற்றாண்டின் அரச பயங்கரவாதமாக சியோனிச சித்தாந்தம் கருதப்படுகிறது.
வரலாற்றில் மிகப்பெரிய மோசடியைச் செய்து பாலஸ்தீனத்தை எப்படியாவது அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக யூதர்களால் தொடங்கப்பட்ட பயங்கரவாத இயக்கம்தான் சியோனிசம். அந்த இயக்கத்தின் மனித நேயமற்ற வழிமுறைகளைத்தான் இந்துத்துவம் தன்னுடைய வழிமுறைகளில் ஒன்றாக சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதை இந்துத்துவவாதிகளே வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்துத்துவ சிந்தனையாளர்களால் நடத்தப்படும் இணையதளங்களில் முக்கியமானது ஸ்வராஜ்யமேக் (swarajyamag.com) அதில் ஜீன் 5, 2017ம் வருடம் ஜெய்தீப் ஆ. பிரபு என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டது. அதன் தலைப்பு ‘இந்துத்துவாவும் சியோனிசமும்: சின்னங்கள் வேறு, எண்ணங்கள் ஒன்று’ என்பதாகும்.
இந்தக்கட்டுரையில் இரண்டின் சித்தாந்தங்களும் கொள்கைகளும் ஒன்றுதான் என்று கூறப்பட்டிருக்கிறது மேலும், இந்துத்துவாவும் சியோனிசமும் ஒன்றுதான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார், இதன் ஆசிரியர்.
2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க் நகரில் இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-ம் சந்தித்துக் கொண்டனர். சந்திப்பின் பிறகு,இனி இருதரப்பு (இந்தியா-இஸ்ரேல்) உறவில் ‘வானமே எல்லை’ என்று குறிப்பிட்டார், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
வானமே எல்லை என்ற சொல் இந்துத்துவாவிற்கும் சியோனிசத்திற்கும் இடையில் இரகசிய உறவுகள் இருக்கிறது என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியது. இந்துத்துவாவினர், ”வானமே எல்லை” என்பதற்கான பொருளையும் அடுத்த ஆண்டே வெளிப்படுத்தினர். 2015 ஜீலையில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் சியோனிசத்திற்கு வலு சேர்த்தது. இதன்மூலம் ‘இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் உள்ள உறவை பிரிக்கவே முடியாது. வானம்தான் அதற்கு எல்லையாக இருக்கும்’ என்று இந்துத்துவாவினர் உணர்த்தினர்.
அதுமட்டுமில்லாமல் இதுவரையில் இந்திய பிரதமர்கள் யாரும் இஸ்ரேலுக்கு சென்றதில்லை. ஆனால் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற கறுப்பு வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் மோடி. 2017ம் ஆண்டு இஸ்ரேலில் நடந்த இந்த சந்திப்பில் மோடியை கட்டியணைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ‘இந்த உறவு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ என்றும் இந்த தருணத்திற்காக 70 ஆண்டுகள் காத்திருந்ததாகவும் வெளிப்படையாகவே கூறினார். 2006-ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக இருந்தபோதே மோடி இஸ்ரேலுக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 2018-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. ஆகவே சியோனிசமும் இந்துத்துவாவும் கொள்கையளவில் மட்டுமில்லாமல் யதார்த்தமாகவும் சகோதரத்துவ உறவை பேணி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
அதுமட்டுமல்லாமல், 26 ஆகஸ்ட் 2019 அன்று இந்தோ இஸ்ரேலிய நட்பு சங்கம் எனப்படும் ஒரு அமைப்பு, மும்பை பல்கலைக் கழகத்தில் ‘சியோனிசம் மற்றும் இந்துத்துவா பற்றிய கருத்தரங்கு’ ஒன்றை நிகழத்தியது. இதில் முக்கிய பேச்சாளர்களாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் இஸ்ரேலிலுள்ள எபிரேயு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான காடி டாப் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.இந்த நிகழ்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் சியோனிசத்தின் தந்தையாக மதிக்கப்படும் தியோடர் ஹெஸிலின் படமும் இந்துத்துவாவின் தந்தையாக கருதப்படும் சாவர்க்கரின் படங்களும் இடம்பெற்றன.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து இந்துத்துவாவினரும் சியோனிசர்களும் ஒருவரையொருவர் வெளிப்படையாகவே கட்டித் தழுவி வருகின்றனர். தங்களுடைய உறவுகளை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர். சியோனிசம் எவ்வாறு பாலஸ்தீனத்தை சீரழித்ததோ அதைப் போன்று இந்தியாவை சீரழிப்பதற்காக இந்துத்துவாவினர் முயன்று வருகின்றனர்.
ஆகவே இந்துத்துவாவையும் சியோனிசத்தையும் ஒப்பிட்டு அவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது!
அத்தகைய முக்கிய அம்சங்களை அடுத்து காண்போம்!
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4