கருவறுக்க நினைக்கும் கரடோய்கர்..!
240p Mobile Version For Download Click Here
கரடோய்கரால் சிறைபிடிக்கப்பட்ட சுலைமான் ஷாவின் மகன் குண்டோக்டுவின் நிலைமை என்னாகும் என்பது குறித்து குர்தோக்லு கூடாரத்தில் சர்ச்சை நடக்கிறது. குண்டோக்டு தவிர ஏனைய அனைவரும் கொல்லப்படலாம் எனவும் பின்னர் மீதியிருப்பது எர்துருல் மட்டும்தான் எனவும் குர்தோக்லு கூறுவதை, அவருடைய கூட்டாளி பேபோராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோத்திரத்தின் நன்மைக்காகவே உங்களுடன் சேர்ந்தேன் எனவும் இது நல்லதற்கல்ல, எனவும் பேபோரா எதிர்ப்பு தெரிவிக்கிறார். கோத்திரத்தின் நன்மைக்காகத்தான் இதெல்லாம் செய்கிறோம் எனக் கூறி சமாளிக்கும் குர்தோக்லு, பேபோராவின் மீது ஒரு கண் வைக்க அல்பர்குவிடம் அறிவுறுத்துகிறார். நம் திட்டங்களைக் குறித்து வாய் திறப்பது போல் தெரிந்தால், அவரைத் தீர்த்துக்கட்டவும் தயங்க வேண்டாமென உத்தரவிடுகிறார்.
குண்டோக்டுவை மீட்பது தொடர்பாக சுலைமான் ஷா கூடாரத்தில் ஆலோசனை நடக்கிறது. அவ்வேளை அங்கு வரும் செல்சான், தம் கணவருக்கு ஏதேனும் நடந்தால் யாரையும் சும்மா விடமாட்டேன் என மிரட்டுகிறார். குண்டோக்டுவுக்கு எதுவும் ஆகாமல் மீட்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என எர்துருல் சமாதானம் செய்விக்கிறார். குண்டோக்டுவை மீட்பதற்காக கரடோய்கரிடம் வருவதற்கு, தாம் தயார் எனக் கூறும் இளவரசர் நுஃமான், தம் மகள் ஹலீமா-வைக் காயி கோத்திரத்தின் மகளாக ஏற்றுக்கொள்ளும்படி சுலைமான் ஷாவிடம் கோரிக்கை வைக்கிறார். கரடோய்கரிடமிருந்து குண்டோக்டுவை மீட்பதோடு, இளவரசர்களையும் பத்திரமாக திருப்பி அழைத்து வருவதற்கான திட்டமொன்றை சுலைமான் ஷாவிடம் விவரிக்கிறார், எர்துருல் .
கரடோய்கரின் இராணுவத்திலுள்ள தம் முன்னாள் நண்பர் ஸரி போலுவைத் தேடி அஃப்சின் வருகிறார். அவர் தற்போது கரடோய்கர் இராணுவத்தின் கேப்டனாக இருப்பதை அறிகிறார். அதே நேரம், கரடோய்கரைச் சந்திக்க வரும் டைட்டஸை ஸரி போலு பார்த்து விடுகிறார். பின்னர், ஸரி போலுவைச் சந்திக்கும் அஃப்சின் நடக்கும் விஷயங்களின் பின்னணியிலுள்ள டெம்ப்ளர்களின் திட்டங்களை விவரித்து, கரடோய்கர் கையில் இளவரசர்கள் சிக்கிவிடாமல் இருக்க அவர் உதவி கோருகிறார். தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் வாக்குறுதியளிக்கிறார்.
குண்டோக்டுவை மீட்பதற்காக செல்லும் சுலைமான் ஷா, தாம் இல்லாத நேரத்தில் கோத்திரத்தின் தலைமையை நிர்வகிக்க குர்தோக்லுவை நியமிக்கிறார். இதனைப் பார்த்து அன்னை ஹேம் ஆத்திரம் கொள்கிறார்.
கரடோய்கர் எதிர்பார்ப்பது போன்று சுலைமான் ஷா இளவரசர்களை தம்முடன் அழைத்துச் செல்லக்கூடாது; தனியாகச் சென்று குண்டோக்டுவை விடுவித்தால்தான் இளவரசர்களைத் தர முடியுமென பேரம் பேசுவதற்குத் திட்டமொன்றை வகுத்துக் கொடுக்கிறார், எர்துருல்.கரடோய்கர் கோட்டைக்கு வெளியே வந்து விட்டால், தமது வீரர்களுடன் பதுங்கியிருந்து கரடோய்கரைத் தாக்கி அனைவரையும் காப்பாற்றி கொண்டு வந்துவிடுவது எர்துருலின் திட்டம். ஆபத்தான இத்திட்டத்துக்கு சுலைமான் ஷா சம்மதிக்கிறார். இத்திட்டத்தைக் கேட்கும் செல்சான், எர்துருலின் திட்டத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தம் கணவர் குண்டோக்டு உயிருக்கு ஆபத்து எனப் பயந்து, குர்தோக்லுவிடம் எர்துருல் போட்டுள்ள திட்டத்தைத் தெரிவிக்கிறார். உடனே இவ்விஷயத்தைக் கரடோய்கரிடம் தெரிவிக்க குர்தோக்லு கிளம்புகிறார்.
சுலைமான் ஷாவும் எர்துருலும் இல்லாத காயி கோத்திரத்தில், ஹலிமா-வுக்கு எதிராக காயி கோத்திரத்தினரைத் திசை திருப்ப, கரடோய்கரால் வியாபார கேரவன் கொள்ளையடிக்கப்பட்ட விஷயத்தைக் குர்தோக்லுவின் ஆதரவாளர்கள் கசியவிடுகின்றனர். விஷயம் அறிந்து, ஹம்ஸாவை மறைத்து வைத்திருக்கும் கூடாரத்தைக் கண்டுபிடிக்கும் காயி கோத்திரத்தினர், ஹலீமா கூடாரத்தின் மீது கல்லெறிந்து அவரைத் தாக்க முயற்சி செய்கின்றனர். அன்னை ஹேம் அவ்விடம் வந்து ஹலீமா-வைக் காப்பாற்றி தம் கூடாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
கரடோய்கரிடம் செல்லும் சுலைமான் ஷா, எர்துருல் கூறியது போன்று கரடோய்கரிடம் சாமர்த்தியமாக பேசி குண்டோக்டுவை விடுவித்து விடுகிறார். ஆனால், இளவரசர்கள் தம் கையில் கிடைப்பது வரை சுலைமான் ஷா-வை விடமுடியாது எனக் கூறி சுலைமான் ஷாவைச் சிறை வைக்கிறான் கரடோய்கர். அதே சமயம், எர்துருல் போட்டுள்ள திட்டத்தைக் குர்தோக்லு மூலம் அறியும் கரடோய்கர் எர்துருலின் திட்டத்தை முறியடித்து, இளவரசர்களைக் கைப்பற்றுவதோடு சுலைமான் ஷாவையும் எர்துருலையும் அவ்விடத்திலேயே கொலை செய்வதற்காக தம் ஆட்களையும் டெம்ப்ளர் டைட்டஸின் ஆட்களையும் மறைந்திருக்க மறு திட்டம் போடுகிறான்.
யாருடைய திட்டம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்போடு இப்பகுதி முடிவடைகிறது.
தொடரும்..
எர்துருல் சீசன் 1 தொடர் 8 | எர்துருல் சீசன் 1 தொடர் 10