சென்னை (11 மார்ச் 2022): நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம் படத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தாலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள ‘உள்ளம் உருகுதையா’ பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இப்பாடலை படத்திலிருந்து நீக்கக் கோரி, அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பேட்டியளித்த அக்கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி, பாடல் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட போதும், இன்று படம் வெளியான பிறகு தான் அதில் முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்தது. எனவே பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும்.
படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், கடவுள் வாழ்த்து பாடல் என தெரிந்தும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளோம். இவ்வழக்கு இந்து கடவுள்களையும், நம்பிக்கைகளையும், இழிவுபடுத்துவோருக்கு ஒரு பாடமாக இருக்கும் என கூறினார்.