சென்னை (19 பிப் 2023): நடிகர் மயில்சாமி நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து மயில்சாமி நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கொரோனா காலங்களில் மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து சினிமாவையும் தாண்டி பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவர். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மயில்சாமியின் இறப்பு சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.