ஜெய்பீம் – (சினிமா விமர்சனம்) பிரமிக்க வைக்கும் சினிமா!

Share this News:

தமிழ் சினிமாவில் ஒரு சில படைப்புகள் தான் காலத்தை தாண்டி நம் மனதின் நீங்கா இடம்பிடித்து நிற்கும். தரமான படமாக நிற்கிறது ஜெய்பீம்

1995ம் ஆண்டு அரசாங்கம் சில பெண்டிங் வழக்குகளை உடனே முடிக்க சொல்லி ஆர்டர் போட, போலிஸார் அதற்கான வேலைகளில் இறங்கின்றனர்.

அதிலிருந்து தொடங்கும் படம், பழங்குடி இருளர் வாழ்க்கையை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறது. எலிக்கறி சாப்பிடுவதிலிருந்து அவர்கள் வாழ்க்கையை நாமே ஏதோ அருகில் பார்த்த உணர்வை இயக்குனர் கடத்துகிறார்.

அவர்களின் முக்கிய தொழில் பாம்புக்கடிக்கு மருந்து போடுவது, அப்படி ஒரு வீட்டிற்கு மணிகண்டன் சென்று வர, அங்கு சில பொருள் திருடுபோகிறது.

போலிஸார் யார் மேல் சந்தேகம் என கேட்க, மணிகண்டனை கைக்காட்ட, அவரை போலிஸார் அழைத்து செல்ல, அவருடைய மனைவி லெஜிமோல் ஜோஸ், என்ன செய்வது என்று அறியாமல், அங்குமிங்கும் அலைந்து கஷ்டப்படுகிறார்.

இந்த கேஸ் எப்படியோ வக்கீல் சந்துருவான சூர்யா கைக்கு போக, அவர் இந்த வழக்கை எப்படி வாதாடினார், மணிகண்டனுக்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

சூர்யா, இவர் குறித்து பிறகு பார்ப்போம், முதலில் பழங்குடி மக்களாக நடித்தவர்கள், பலரையும் உண்மையாகவே அந்த இடத்திற்கே சென்று நடிக்க வைத்திருப்பார்கள் போல அத்தனை எதார்த்தம். அதிலும் மணிகண்டன், லெஜிமோல் ஜோஸ் நம் மனதை கலங்க வைக்கின்றனர். கண்டிப்பாக தேசிய விருது லெஜிமோலுக்கு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. மேலும் மொசக்குட்டி, இருட்டப்பன் என்ற கதாபாத்திரம் அனுபவமுள்ள நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு நடித்து அசத்தியுள்ளது.

ஒரு அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் எளியவர் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகிறது என்பதை மூஞ்சில் அடித்தார் போல் கூறியுள்ளனர். அதிலும் இல்லாத சாட்சியை உருவாக்குமிடமெல்லாம் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று அச்சப்படுத்துகிறது. பெருமாள்சாமி என்ற கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரகாஷ்ராஜ் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். கர்ணன் ரஜிஸா விஜயனும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

சரி சூர்யா இதில் என்ன செய்கிறார் என்றால். அவர் தானே முதுகெலும்பு. சூர்யா கண்டிப்பாக இப்படி ஒரு படம் தேர்ந்தெடுத்து நடித்து, தயாரித்ததற்கு எத்தனை பூச்செண்டு வேண்டுமானாலும் கொடுக்கலாம், உங்கள் திரைப்பயணத்தில் ஒரு மகுடம் இந்த ஜெய்பீம், வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சார். படத்தின் மிகப்பெரும் பலம் ஷான் ரோல்டன் பின்னணி இசை, மிரட்டியுள்ளார், ஒளிப்பதிவும் நம்மை அப்படியே அந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சினிமா


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *