சென்னை (20 பிப் 2020): இந்த விபத்தில் நானும் இறந்திருக்கக் கூடும் என்று இந்தியன் 2 படப் பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து நடிகர் கமல் பேட்டியளித்தார்.
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். இந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல், கஜல் அகர்வால் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் கமல் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “100 கோடிகள், 200 கோடிகள் என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கான பாதுகாப்பை அளிக்கமுடியாத ஒரு துறையாக இருப்பதை அவமானத்திற்குரியதாகவே கருதுகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் என்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாயை இழப்பீடு கொடுப்பதாக அறிவிக்கிறேன். இது அவர்களின் இழப்பிற்கு கைமாறாக இல்லை. பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு என்னால் இயன்ற நிதியுதவி அளிக்கிறேன்.
இந்தப் பணத்தை முதலுதவியாகத் தான் நினைக்கிறேன். இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை என்பது கடை நிலை ஊழியனுக்கான காப்பீடு இருக்க வேண்டும்.
இந்த அறைக்குள் நானும் இன்று இருந்திருக்கக்கூடும். மயிரிழையில் உயிர் தப்பினேன். நான்கு நிமிடங்களுக்கு முன்பு எந்தக் கூடாரம் நசுங்கியிருந்ததோ அந்தக் கூடாரத்தில் தான் நானும், கதாநாயகியும் நின்று கொண்டிருந்தோம்.
அப்படி நகர்வதற்கு பதிலாக இப்படி நகர்ந்திருந்தால் இப்பொழுது எனக்கு பதிலாக வேறு ஒருவர் இங்கு பேசிக் கொண்டிருந்திருப்பார். விபத்திற்கு ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. அனைவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்” என்றும் கமல் கூறினார்.