சென்னை (13 டிச 2021): தனக்கு கொரோனா எப்படி தொற்றியது? என்பது குறித்து திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில், “இங்கு பேசியவர்கள் ஆழ்வார்பேட்டையை பேருந்தில் கடக்கும்போதெல்லாம் என்னை நினைத்து கொள்வதாக கூறினர். நான், சிவாஜிகனேசன் உட்பட பலரும் எங்களது காலத்தில் வாழ்ந்த உயர்ந்த நட்சத்திரங்களை இதுபோல வியந்து பார்த்தவர்கள்தான். சினிமா ரசனை என்பது, மனதுக்குள் நெருப்பு போல பற்றிக் கொள்வது.
ஆர்வம், திறமை இல்லாமல் சினிமாவில் யாராலும் சாதிக்க முடியாது. சினிமாவுக்கு சாதி, மதம் கிடையாது. சிலர் இந்தக் கருத்தை மறுப்பார்கள்தான். என்றாலும் எனக்கு கவலை இல்லை. திரையரங்கில் விளக்கை அணைத்துவிட்டால் அங்கு சாதி காணாமல் போய்விடும். எனவேதான் சினிமாவில் எதை சொன்னாலும் நாங்கள் எச்சரிக்கையோடு சொல்கிறோம்.
வாழ்க்கை நமக்கு எப்போதும் கற்றுத் தரவே முயற்சிக்கிறது. நாம்தான் கர்வத்தில் பலவற்றை உதாசீனப்படுத்துகிறோம். எங்களைப் பார்த்து புதியவர்கள் வியந்து விட வேண்டாம். எங்களின் தவறுகளை கண்டறிந்து அதை நீங்கள் செய்யாமல் இருங்கள்.
இசையமைப்பாளர் ரதன், தனக்கு தாய் சிறுவயதில் எனது படத்தை காட்டி சோறூட்டியாதாக கூறினார். பொதுவாக குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள், அவருக்கு ஒரு ஜந்து போல நான் பயன்பட்டுள்ளேன் போல (நகைச்சுவையாக)! இசைக்கு மொழி வேறுபாடு கிடையாது. இசையமைப்பாளர் ரதன் இந்த மேடக்கு வர ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
எப்போதுமே படத்தின் கதையுடன் பாடலை கலப்பது எளிதானதல்ல. இயக்குநர் கே.பாலசந்தர் போன்றவர்களிடம் அதை கற்க வேண்டும். இசைத் தகடுகள் பல மாற்றங்களை கண்ட பின்னரும், இப்போதும் வட்ட வடிவ குறுந்தகடு மாதிரியை ஏன் இசை வெளியீட்டு விழாக்களில் பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை. யாராவது கோபப்பட்டாலும் சரி… என்னைக்கேட்டால், தமிழில் இதுவரை நல்லதாக ஒரு மியூசிக்கல் சினிமா வரவில்லை என்பதுதான் உண்மை.” என்றார்.
கொரோனா குறித்து மக்கள் யாரும் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். நான் குப்பங்களிலும், மழை நீரில் நடந்தபோது வராத கொரோனா தொற்றானது அமெரிக்கா மற்றும் துபாய் விமான நிலையங்களில் இருந்து எனக்கு வந்துவிட்டது” என்றார்.
சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில். படத்தின் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான், ரீயா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், வெற்றிமாறன், பிரபு சாலமன், நடிகை ரித்விகா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.