பெங்களூரு (18 ஏப் 2021):பிக்பாஸ் தமிழ் முதல் ஸீஸனில் பங்கேற்று புகழ் பெற்றவர் ரைசா வில்சன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது தி சேஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் ஃபேஷியல் சிகிச்சைக்காக ஒரு தோல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர் அளித்த சிகிச்சை காரணமாக நடிகை ரைஸா முகத்தில் கடும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. முகம் வீங்கிய நிலையில் உள்ள புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ரைஸா, சிகிச்சையளித்த மருத்துவரைச் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிகிச்சை அளித்த மருத்துவரைக் குறிப்பிட்டு, “இந்த மருத்துவரை நேற்று ஃபேஷியல் சிகிச்சைக்காகச் சந்தித்தேன். எனக்கு தேவையில்லாத செயல்முறையைச் செய்யும்படி என்னை வற்புறுத்தினர். அதன்விளைவு, இதுதான். அவர் தற்போது என்னைச் சந்திக்கவும் என்னிடம் பேசவும் மறுக்கிறார். அங்கு பணியாற்றுபவர்கள் அவர் வெளியூர் சென்றுள்ளதாகக் கூறுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.