சென்னை (31 மே 2020): ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஒருபுறம் பலராலும் பாராட்டப்படும் நிலையில் மாதர் சங்கம் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொன்மகள் வந்தாள் படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜோதிகா தனது கெரியரில் முதல் முறையாக வழக்கறிஞராக நடித்து உள்ளார். நேரடியாக OTT ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் சூர்யா பொன்மகள் வந்தாள் படத்தினை OTT யில் ரிலீஸ் செய்துள்ளார். ஜோதிகா உடன் இந்த படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
பொன்மகள் வந்தாள் படத்தை பாராட்டி முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் ட்விட் செய்து வருகின்றனர். பிரபல இயக்குனர் சீனு ராமசாமி ஜோதிகாவின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
“இயல்பான நடிப்பில் உறுதியாக,நெகிழ்ந்து நிலைத்தப் பார்வையுமாக சகோதரி ஜோதிகா பார்த்திபனார் மீது எனக்கு முதல்முறையாக கோபம், இயக்குநருக்கு பாராட்டு, Producer சூர்யா அவர்களின் சமூகப் பொறுப்பிற்குச் சான்று இப்படமும் இடைவெளியின்றிப் பார்த்தேன்” என அவர் ட்விட் செய்துள்ளார்.
அதேபோல இயக்குநர் பாரதிராஜாவும் படத்தினை பாராட்டியுள்ளார். ரசிகர்களாலும் திரைப்படம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நீதி மறுக்கப்பட்ட பெண்களுக்குஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடிய ஜோதிகாவை எதிர்த்து இந்த அமைப்பினர் போராட்டம் நடத்துவது போல காட்சி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் அது தொடர்பாக கடிதத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அந்த காட்சியை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் இயக்குனர் கூறியிருப்பதாவது..
மன்னிப்பும் விளக்கமும்,
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் குறிப்பிட்டதொரு காட்சியில் நாயகி நீதிமன்றத்திற்கு வரும் இடத்தில் பெண்கள் போராட்டம் செய்வதை முன்னிட்டு தோழர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது, எங்களது கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க முயற்சிக்கிறோமென உறுதியளிக்கிறோம். இந்தத் திரைப்படத்திற்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில் அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இப்படிக்கு
ஜே.ஜே.ப்ரட்ரிக்
இவ்வாறு அந்த கடிதத்தில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.