கரடோய்கரின் திட்டத்துக்கு சம்மட்டி அடி!
குர்தோக்லு திட்டமும் தவிடுபொடி..!
240p Mobile Version For Download Click Here
ஹலீமா-வை மீட்டுத் தம் கூடாரத்தில் பாதுகாக்கும் அன்னை ஹேமிடம், இவர்களால்தான் நம் கோத்திரத்துக்கு இத்தனை துன்பங்களும் நிகழ்ந்திருக்கும்போது எப்படி அவளைத் தம் கூடாரத்தில் பாதுகாக்கலாம் என செல்சான் கோபத்தில் கத்துகிறாள். அவளைச் சமாதானப்படுத்தும் அன்னை ஹேம், அடைக்கலம் தேடி வந்தவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தம் கோத்திரத்தின் பழக்க வழக்கம் என்பதை நினைவுறுத்துகிறார்.
கரடோய்கருடன் இணைந்து போட்டுள்ள சதியில், சுலைமான் ஷா உட்பட அனைவரும் கொல்லப்படுவர் என்ற உறுதியில் குர்தோக்லு சுலைமான் ஷாவின் தலைமையகத்தைக் கைப்பற்றுகிறார். இதனைக் கண்டு அன்னை ஹேம் அதிர்ச்சியடைகிறார்.
கைதிகளைப் பரஸ்பரம் கைமாறிக் கொள்ள நிச்சயித்திருந்த கர்த்தால் டெபேசியில் அனைவரும் ஒன்றுகூடுகின்றனர். எது நடந்தாலும் தம் உத்தரவு வரும் வரை எதுவும் செய்ய வேண்டாமென டெம்ப்ளர் டைட்டஸ் தம் வீரர்களிடம் தெரிவிக்கிறான். எர்துருல் இளவரசர்களை கரடோய்கரிடம் அனுப்பியதும், சுலைமான் ஷாவையும் எர்துருலையும் தாக்க கரடோய்கர் மறைந்திருக்கும் தம் வீரர்களுக்கு உத்தரவு போடுகிறான். ஆனால், எவரும் தாக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிறான். அதே சமயம், மறைந்திருந்த எர்துருலின் வீரர்கள் கரடோய்கரைச் சூழ்ந்துகொண்டு அவனைக் கைதியாக்குகின்றனர். தாம் போட்டிருந்த திட்டம் எதுவுமே நடக்காமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகிறான் கரடோய்கர். டைட்டஸ் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்துவிடுகிறான்.
எர்துருலையும் அவன் வீரர்களையும் சுற்றி வளைத்துக் கொல்ல கரடோய்கர் போட்டத் திட்டம், அஃப்சின் பே-யுடைய உதவியால் தவிடுபொடியாகிறது. அதற்கு, கரடோய்கரின் தலைமை கேப்டன் ஸரி போலு உதவி செய்கிறார். முன்னரே, அஃப்சின் பேயுடன் பேசி ஸரி போலுவின் நம்பிக்கையான வீரர்களை கர்த்தால் டெபேசிக்குக் கொண்டு வந்ததால், கரடோய்கர் போட்ட திட்டம் பலிக்காமல் போகிறது. கரடோய்கர் கொள்ளையடித்தப் பொருட்களும் பத்திரமாக மீட்கப்படுகிறது.
தாம் போட்டிருந்த திட்டம் எப்படி கரடோய்கருக்குத் தெரிந்தது என்பது தெரியாமல் குழம்பும் எர்துருலிடம், கரடோய்கரின் ஆட்கள் கோத்திரத்தில் தாக்குதல் நடத்திய அன்று இரவு நடந்த விஷயங்களை எடுத்துக் கூறி குர்தோக்லு மீது தமக்கிருக்கும் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார் வைல்ட் டெமிர்.
கரடோய்கரை எர்துருல் கைது செய்த விவரம் டைட்டஸ் அனுப்பும் செய்தி மூலம் அறிந்த உஸ்தாத் ஆஸம் கடும் சினம் கொள்கிறார். கரடோய்கரை என்ன விலை கொடுத்தாவது உயிருடன் மீட்க டைட்டஸுக்குச் செய்தி அனுப்புகிறார். காயி கோத்திரத்தினர் அலெப்போவுக்குக் குடிபெயர்வதைத் தடுக்க தாமே அலெப்போவுக்குச் செல்ல முடிவு செய்கிறார்.
தலைமையகத்தில் குர்தோக்லு பிற பே-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நேரம் அன்னை ஹேம் எதிர்த்ததால், பே-யின் சின்னங்கள் அனைத்தையும் அடாவடியாக தம் கூடாரத்துக்கு மாற்றி தம்மைத் தலைவராக உறுதி செய்துகொள்கிறார் குர்தோக்லு. தம் கூடாரத்தில் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில், சுலைமான் ஷாவும் அவரின் மகன்களும் திரும்பி வரப்போவதில்லை எனக்கூறும் குர்தோக்லு அலெப்போவுக்குக் குடிபெயர முன்னர் சுலைமான் ஷா எடுத்த தீர்மானத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார். அந்நேரம், கூடாரத்தில் மகிழ்ச்சி செய்திக்கான பறை அடிக்கப்படுகிறது. வெளியே வந்து என்னவென பார்க்கும் குர்தோக்லு, சுலைமான் ஷாவும் அவர் மகன்களும் உயிருடன் திரும்பி வந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.
தம் கோத்திர வழக்கப்படி விசாரணை நடத்தப்பட்டு, கரடோய்கருக்குத் தண்டனை வழங்கப்படும் என அறிவித்துவிட்டுத் தம் கூடாரத்தில் நுழையும் சுலைமான் ஷா, அங்கு தலைவருக்குரிய அடையாளச் சின்னங்கள் எதுவும் இல்லாததைப் பார்த்து குழம்புகிறார்.
சுலைமான் ஷா திரும்பி வரப்போவதில்லை என்ற தைரியத்தில் தலைமையைக் கைப்பற்றிய குர்தோக்லு என்ன செய்யப்போகிறார், கரடோய்கரின் கதி என்ன ஆகப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இப்பகுதி முடிவடைகிறது.
தொடரும்