240p Mobile Version For Download Click Here
தம் குடியினரின் புதிய குடியிருப்புக்கான நிலம் அலெப்போ அமீரிடம் கேட்பதற்குத் தூது செல்ல, சுலைமான் ஷா தம்மையே அனுப்புவார் என்ற எண்ணத்தில் பயண ஏற்பாடு செய்ய குண்டோக்டு தயாராகிறார். ஆனால், அவர் மனைவி செல்சன் அதற்கான உத்தரவு பெற்ற பின்னர் ஏற்பாடு செய்துகொள்ளலாம் எனத் தடுக்கிறார். அவருக்கு அதில் நம்பிக்கையில்லை.
செல்சன் எதிர்பார்த்தது போன்றே, சுலைமான் ஷா அலேப்போவுக்குத் தூதுவராக எர்துருலை அனுப்ப உத்தரவிடுகிறார். இதனால் குண்டோக்டு கோபமடைகிறார். அவருக்கும் சுலைமான் ஷாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. தந்தையிடமிருந்து அடி வாங்கி வெளியேறும் குண்டோக்டுவைப் பார்த்து, எர்துருல் சுலைமான் ஷா கூடாரத்திற்குச் செல்கிறார். குண்டோக்டுவுக்கு உரிமையான தூது பணியைத் தம்மிடம் தந்ததற்கான காரணம் கேட்கிறார். அதிகாரத்தின் மீதான இச்சை குண்டோக்டுவுக்கு ஏற்பட்டுள்ளதைச் சரி செய்து பாடம் புகட்டுவதற்காகவே அவ்வாறு செய்ததாக சுலைமான் ஷா விளக்கம் அளிக்கிறார். அத்துடன், காயி கோத்திரத்தின் எதிர்காலமே எர்துருலின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதை நினைவுபடுத்தி அவரால் மீட்டு கொண்டு வரப்பட்டவர்களின் நலன் குறித்து யோசிக்காமல், வெற்றியோடு திரும்பி வர அறிவுரை அளிக்கிறார்.
தோளில் ஆடு சுமந்து ஓடும் பாரம்பரிய விளையாட்டை எர்துருலின் நண்பர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர். அப்போது, அலெப்போ செல்லும் பயணச் செய்தியோடு எர்துருல் வருகிறார். செய்தி கேட்டு நண்பர்கள் குஷியாகின்றனர். துர்குட்டிடமிருந்து பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறதே என அய்கிஸ் வருந்துகிறார். அலெப்போவில் புதிய இடம் கிடைத்து அங்குக் குடியேறியவுடன் திருமணம் நடக்கும். அதுவரை பொறுமையாக இரு என துர்குட் ஆறுதல் கூறுகிறார்.
டெம்ப்ளர்களின் கோட்டையில் இளவரசி எலனோராவிடம் அவர் தந்தையைக் கொன்ற முஸ்லிம்களையும் தமது தம்பி பிஸோலைக் கொன்ற காயிகளையும் பழிவாங்குவதாக உறுதியளித்துவிட்டு, கரடோய்கரைச் சந்திக்க டைட்டஸ் வெளியேறுகிறார்.
இதற்கிடையில், கரடோய்கரைச் சந்திக்கிறார்., சுலைமான் ஷாவால் சமாதானப் பேச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குர்தோக்லு..! தாம் தந்த நேரம் மறுநாள் காலைக்குள் நிறைவடைவதை நினைவுறுத்தி, அதற்குள் நல்ல முடிவினை எடுக்கவும் இல்லையேல் தம் படை காயி கோத்திரத்தைத் தாக்கி அழிக்கும் என்றும் கரடோய்கர் மிரட்டுகிறார். ஆனால், கரடோய்கருக்குச் சிலுவைப்படையினரால் கொண்டுவரப்பட்ட அந்த மூன்று கைதிகள் விசயம், சுல்தான் அலாவுதீனுக்குத் தெரியாது எனவும் அவர்கள் சுல்தான் அலாவுதீனின் உறவினர்கள் தானே எனவும் சுல்தான் அலாவுதீனுக்குத் தெரியாமல் காயி கோத்திரத்தின் மீது கரடோய்கரால் தாக்குதல் நடத்த முடியாது எனவும் குர்தோக்லு கரடோய்கரிடம் கூறுகிறார். குறிப்பிட்ட கைதிகள் விசயத்தில் கரடோய்கருக்கு ஏதோ திட்டம் உள்ளது எனவும் அது தமக்குத் தேவையில்லை; கரடோய்கருக்குத் தேவையானது கிடைக்கவேண்டுமெனில் ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமெனக் கூறி கரடோய்கருடன் கூட்டணி போடுகிறார் குர்தோக்லு. அவருக்குச் சிலுவைப்படையினர் மீது தாக்குதல் நடத்தியது எர்துருல் என்பதையும் தெரிவிக்கிறார்.
அலெப்போ பயணத்துக்குத் தயாராகும் எர்துருல், தாம் வரும் முன்னரே சென்றுவிடுவோம் எனக் கூறும் ஹலீமாவிடம் அவ்வாறு செல்ல வேண்டாம்; தாம் விரைவில் திரும்பிவிடுவதாக கூறுகிறார். பதிலெதுவும் அளிக்காமல் ஹலீமா சென்றுவிடுகிறார். தாம் திரும்பி வரும்வரை ஹலீமா தங்கியிருக்கும் கூடாரத்தைப் பாதுகாக்கும்படி வைல்ட் டெமிரிடம் பொறுப்பளித்துவிட்டு, அலெப்போவுக்குச் செல்கிறார் எர்துருல்.
ஹலீமாவின் மீது எர்துருல் ஈர்ப்பில் இருப்பது செல்சனுக்குப் பிடிக்கவில்லை. எர்துருல் புறப்பட்ட பின்னர், ஹலீமாவிடம் சென்று இவ்வாறு அழையா விருந்தாளியாக தங்குவதில் வெட்கமில்லை; உடனே இங்கிருந்து கிளம்புங்கள் என ஹலீமாவைக் கேவலப்படுத்துகிறார். இதனைப் பார்த்த எர்துருல் தாயார் ஹேம், செல்சனிடம் தம் பழக்கவழக்கங்களைப் பேணக்கூறி கண்டிக்கிறார்.
அன்றிரவு காயி கோத்திரத்தைவிட்டு வெளியேற, ஹலீமாவும் அவர் தந்தையும் தீர்மானிக்கின்றனர். அப்போது, அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தமக்கு எர்துருல் தந்து சென்றுள்ளதாகக் கூறி அவர்கள் பாதுகாப்புக்கு வாளைக் கொடுக்கிறார் வைல்ட் டெமிர். காயி கோத்திரத்துக்கு வந்த வணிகரின் வேலையாள் சந்தேகப்படும் வகையில், ஹலீமா கூடாரத்தையே சுற்றி வருகிறார்.
கரடோய்கரைச் சந்திக்கும் டைட்டஸ், தம் தம்பியையும் சிலுவைப்படையினரையும் கொன்றவர்கள் குறித்து கேட்கிறார். அது சுலைமான் ஷாவின் மகன் எர்துருல் என்று தெரிந்ததும் அவரைத் தாமே கொல்வதாக டைட்டஸ் கோபத்துடன் கத்துகிறார். ஆனால், தம் அதிகார எல்லைக்குட்பட்ட இடத்தில் தண்டிப்பதற்கான உரிமை தமக்கே இருப்பதாகவும் வேறு யாரும் அதில் தலையிட விடமாட்டேன் என கரடோய்கர் கூறுவதோடு, எர்துருலை டைட்டஸிடம் தாமே ஒப்படைப்பதாகவும் தற்போது எர்துருல் அலெப்போ செல்வதாகவும் டைட்டஸிடம் தெரிவிக்கிறார்.
அலெப்போ பயணத்தில் இருக்கும் எர்துருலும் நண்பர்களும், இடையே இளைப்பாற ஒரு இடத்தில் தங்குகின்றனர். அங்கு, ஹலீமாவின் நினைப்பிலேயே இருக்கும் எர்துருலின் காதில் கனைப்பு சத்தமொன்று கேட்கிறது. சத்தம் வந்த இடத்துக்குச் சென்ற எர்துருல், காயமுற்ற மான் ஒன்றுக்குச் சிகிச்சையளிக்கும் இப்னு அரபியைச் சந்திக்கிறார். இன்றைய ஸ்பெயினான அந்தலூசியாவைச் சேர்ந்தவன் தாம் என்று அறிமுகம் செய்யும் இப்னு அரபி, எர்துருல் செல்லும் பயணத்தில் ஆபத்துகள் உள்ளன, கவனமாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறார்.
இத்துடன் இப்பகுதி நிறைவடைகிறது.
எர்துருல் சீசன் 1 தொடர் 2 | எர்துருல் சீசன் 1 தொடர் 4