மருத்துவமனைகளின் அலட்சியம் – சாதாரண நோயாளிகளும் பலியாகும் பரிதாபம்!

Share this News:

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 26,273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 671 உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,53,751 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 17,994 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது இப்படியிருக்க அரசின் உத்தரவால் பெரும்பாலான கொரோனா பாதிக்கப்படாத நோயாளிகளும் சித்ரவதைகளை அனுபவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் குறைவே. எனினும் அரசின் உத்தரவின்படி பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடிபிடித்தே வருகின்றனர். எனினும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கும் வழக்கமாக கிடைக்கும் சிகிச்சைகள் மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் நிராகரிப்பதால் அரசு மருத்துவமனைகளை நம்பியே உள்ளனர்.

ஆனால் அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால் அங்கும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. எங்கு போனாலும் சாதாரண நோயாளிகள் கூட சித்ரவதைகளை அனுபவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா சோதனை முடிவுகளின் படியே சிகிச்சை அளிக்க வேண்டியஉத்தரவை அரசு பிறப்பித்துள்ளதால், அவசர சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் இதர நோயாளிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா சோதனையோ உள்ளூரில் வாய்ப்பு இல்லாமல் 60 கி.மீ தூரம் உள்ள தஞ்சைக்கோ, அல்லது 100 கி.மீ தூரம் உள்ள திருச்சிக்கோ செல்ல வேண்டும். அங்கும் உடனடியாக சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல், கொரோனா சோதனை முடிவுகளும் உடனடியாக கிடைப்பதில்லை. இவைகளால் ஏற்படும் கால தாமதம் சாதாரண நோயாளிகளுக்கும் முதலுதவி கூட கிடைக்கப்பெறாமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் உத்தரவால் உரிய முதலுதவி கிடைக்காமல் கொரோனா சோதனைக்காக அலைக்கழிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தது அதிராம்பட்டினம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது அதிராம்பட்டினம் என்றில்லை பல ஊர்களிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளன.

அரசும், சுகாதாரத்துறையும் இவ்விவகாரங்களில் தலையிட்டு அவசர நோயாளிகளுக்கு முதலுதவி கிடைக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Share this News:

Leave a Reply