புதுடெல்லி (10 மே 2020): இந்தியாவில், நேற்று ஒரே நாளில், 2894 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,808 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, வரும் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், ஆயிரத்து 165 பேருக்கும், தமிழகத்தில், 526 பேருக்கும் புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 62 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில், கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில், மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால், 20 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 779 பேர் மரணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில், 7 ஆயிரத்து 797 பேரும், டெல்லியில், 6 ஆயிரத்து 318 பேரும், தமிழகத்தில், 6 ஆயிரத்து 535 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில், 3 ஆயிரத்து 708 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 ஆயிரத்து 301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 101 பேர் உயிரிழந்துள்ளனர்.