பாட்னா (17 டிச 2022): பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சரண் மாவட்டத்தின் மர்ஹௌரா துணைப்பிரிவின் மஸ்ராக் தொகுதியில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மது அருந்தி தீவிர நோய்வாய்ப்பட்டு கண்பார்வையை இழந்தவர்கள் குறித்தும் செய்திகள் வருகின்றன.
22 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
50க்கும் மேற்பட்டோர் போலி மதுபானம் அருந்தியதாக இறந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சரண் மாவட்ட நீதிபதி ராஜேஷ் மீனா இதுகுறித்து கூறுகையில், கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க சோதனை நடத்தப்படுகிறது. விசாரணைக்காக 30 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக மீனா கூறினார்.
இந்த சம்பவத்தால் பீகார் சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் நிதிஷ்குமார் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
மாநிலத்தில் மதுவிலக்கு விவகாரத்தில் மாநில அரசை குறிவைக்கும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மீதும் நிதிஷ்குமார் சாடினார். பீகாரில் இந்த ஆண்டு ஒன்பது கள்ள சாராய வழக்குகள் பதிவாகியுள்ளன. சரண் நகரில் மட்டும் சுமார் ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர்.