பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உவைசியின் (AIMIM) கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.
இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணும் பணி துவங்கியதில் இருந்தே முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் மெகா கூட்டணியும் மாறி மாறி சில சுற்றுக்களில் முன்னிலை பெற்று வருகின்றன. இதனால், எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 128 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதற்கிடையேஅகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, கட்சி வேட்பாளர், அக்தருல் இமான் அமூர் சட்டசபையில் முன்னிலை வகிக்கிறார், முஹம்மது இஷார் அஸ்ஃபி மற்றும் முகமது அன்சார் நயீமி ஆகியோர் முறையே கொச்சதமன் மற்றும் பகதூர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.