கோழிக்கோடு : துபையிலிருந்து கேரளாவிலுள்ள கரிப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையிலிருந்து விலகியபோது ஏற்பட்ட விபத்தில் இரு துண்டுகளாக விமானம் பிளந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர்.
கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் விமான நிலைய ஓடுபாதை குறுகியது. இதில், விமானத்தைத் தரையிறக்குவது துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையேல் பெரும் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு.
வந்தே பாரத் மிஷனில் இன்று இரவு 7.41 மணிக்கு துபையிலிருந்து 191 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. 10 குழந்தைகளுடன் 184 பயணிகளும் பைலட் உட்பட 7 ஊழியர்களும் அதில் பயணம் செய்தனர்.
கடும் மழையால் விமானம் தரையிறங்கும்போது, ஓடுபாதை தெளிவாக தெரிவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் விமானம் தரையிறங்கும்போது, திடீரென ஓடுபாதையிலிருந்து விமானம் விலகியது.
தொடர்ந்து விமானத்தைக் கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பைலட்டின் கட்டுப்பாட்டை மீறி ஓடிய விமானம், சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து இரு துண்டுகளாக பிளந்தது. இதில், பைலட் உட்பட ஆறு பேர் மரணம் அடைந்ததாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் இரு துண்டுகளாக பிளந்தாலும் விமானத்தின் முன்பக்கம் இருந்தவர்கள் காயங்களுடனும் பின்பாகத்தில் இருந்தவர்கள் அதிகக் காயமேதுமின்றியும் உயிர் தப்பியுள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்: 00971 543090572