புதுடெல்லி (23 செப் 2019): காஷ்மீர் விவகாரம், பிரிவு 370 நீக்கம் மற்றும் அஸ்ஸாம் விவகாரங்களில் மர்கஸி ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் அமைப்பு பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்யது உத்தரவிட்டது மத்திய அரசு. மேலும் அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு நாட்டில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் நிலவி வருகின்றன.
இந்நிலையில் இவ்விவகாரம் மற்றும் அஸ்ஸாம் விவகாரங்களில் மர்கஸி ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் அமைப்பு மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மவுலானா அஸ்கர் அலி இமாம் மஹ்தி அல் சலஃபி, மோடி அரசின் முடிவுக்கு ஆதவு தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்றும், ஜமியத்துல் உலமா ஹிந்த் அமைப்பின் முடிவே எங்களது முடிவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிப்பதாக ஜமியத்துல் உலமா ஹிந்த் தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.