புதுடெல்லி(16 ஜன 2021): இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்கூட்டியே தெரிந்து கொண்டதற்கான வாட்ஸ்ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும், டிஆர்பி ஊழல் வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றமாக, குடியரசு தொலைக்காட்சியின் நெறியாளர் அர்னப் கோஸ்வாமி புல்வாமா தாக்குதல் நடப்பது தொடர்பாக முன்னரே தெரிந்திருந்ததற்கு ஆதாரமாக, வாட்ஸ்ஆப் அரட்டை இணையத்தில் கசிந்துள்ளது.
டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தனக்கு சாதகமாக கையாளவும், பாஜக அரசாங்கத்திடம் உதவி பெறவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் அந்த உரையாடல்களில் உள்ளன. கோஸ்வாமி மற்றும் தாஸ்குப்தா அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செய்தி நெட்வொர்க்குகள் மற்றும் டி.ஆர்.பி ரேட்டிங் அமைப்பு ஆகியவைகள் பற்றி விவாதிப்பதாக அந்த உரையாடல்கள் தொடர்கின்றன.
பிப்ரவரி 14, 2019 அன்று நடந்ததாக கூறப்படும் ஒரு அரட்டையில் கோஸ்வாமி, “இந்தத் தாக்குதலை நாங்கள் பைத்தியம் போல் வென்றோம்” என்று கூறுகிறார். ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினருடன் சென்ற இராணுவ வாகனங்கள்மீது புல்வாமா மாவட்டம், லெத்போரா அருகே வாகனத்தில் நிறைத்த வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர் இழந்த அதே நாளில் இந்த வாட்ஸ்ஆப் உரையாடல் நடந்துள்ளதுதான் அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல்.
https://twitter.com/abhijeet_dipke/status/1349960068653989889
புல்வாமா தாக்குதலின் எதிரொலி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது. அந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 303 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.