பெங்களூரு (12 ஆக 2020): காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாச மூர்த்தி-இன் உறவினர் ஒருவர் இஸ்லாத்தின் தூதர் குறித்து தரக்குறைவான Facebook இடுகை ஒன்றை பதிவிட்டிருக்கின்றார்.இதன் காரணமாக பெங்களூரு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கே.ஜி. ஹள்ளி பகுதியில் ஒன்று கூடினர். நவீன் என்ற அந்த நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருக்கின்றார் நவீன். போலீஸார் அவரைக் காவலில் எடுத்து இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் காவல்நிலையத்துக்கு வந்த சாம்ராஜ்பேட் எம்.எல்.ஏ. ஜமீர் அஹ்மத் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்து, மேற்கொண்டு வழக்கு தொடுப்பதற்கான வேலைகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதி வாழ் உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் பலரும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு குழுமியிருந்த முஸ்லிம் இளைஞர்களை சமாதானப்படுத்த முயன்றிருக்கின்றார்கள். ஆனால்,காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுத்ததாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் அதனால்தான் இளைஞர் சிலர் வெகுண்டு வாகனங்களை அடித்து நொறுக்கியதாகவும் முஸ்லிம்கள் தரப்பு கூறுகின்றது.
உள்ளூர் ஊடக சேனல்கள் சில, இந்த சம்பவம் குறித்து ஒருதலைப்பட்சமான செய்திகளை வழங்கியதும் மக்களிடையே கோபத்தை வரவழைத்திருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.