லண்டன் (20 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவண படம் உலக அளவில் விவாத பொருளாகியுள்ளது.
கடந்த 17 ஆம் தேதி பிபிசி குஜராத் இனப்படுகொலை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.
பிபிசி ஆவண படம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட எம்.பி.இம்ரான் ஹூசைன் நேற்று பிரச்சினை எழுப்பினார்.
அப்போது பிரதமர் ரிஷி சுனக் குறுக்கிட்டுப் பேசுகையில், “குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது” என்றார்.
யூடியூபில் வெளியான இந்த ஆவண படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.